தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக சார்பில், தோழமை கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாளை (ஜூலை 1) சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தோழமை கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து தவெகவின் முக்கிய தலைவர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
தவெகவுடன் கூட்டணி அமைச்சரவையில் பங்கேற்றுள்ள இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விசிக ஆகிய கட்சிகளுக்கு தவெக தரப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதைத் தவிர தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்த சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதிமுகவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு முன்னர் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பங்கெடுத்தவையாகும். தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது. அதே நேரத்தில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தவெக 108 இடங்களை கைப்பற்றி இருந்ததால் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவை கேட்டது. திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள ஆதரவு அளித்தது மட்டுமின்றி விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகள் அமைச்சரவையிலும் பங்கேற்றன.
இதையடுத்து திமுக கூட்டணிக்கட்சிகள் ஒவ்வொன்றாக திமுக கூட்டணியை விட்டு வெளியேறியதாக அறிவித்தன. மறுபுறம் இந்த கட்சிகளை ஒருங்கிணைத்து தவெக புதிய கூட்டணியை உருவாக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டே தவெக தோழமை கட்சிகள் கலந்துகொள்ளும் கூட்டத்தை நாளை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தகவல் பகுப்பாய்வு குழுவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தவெக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது தனது எக்ஸ் தளத்தில் தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்திருந்தார். இதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தன.
இந்நிலையில் நாளை ஒருவேளை புதிய கூட்டணி அறிவிக்கப்படும் பட்சத்தில் அதற்கு தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி என்றோ அல்லது வேறு பெயரோ வைக்கப்படலாம் என்று பேசப்படுகிறது.
