தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான 2026-27 கல்வியாண்டு தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் நாளை (ஜூலை 1) வெளியிடுகிறார். அதேநேரத்தில், பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணையும் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அண்ணா பல்கலைக்கழக துறைசார் கல்லூரிகள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு சுமார் 1.08 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் ஒற்றைச்சாளர முறையிலான கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
நடப்பு கல்வியாண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 3 முதல் ஜூன் 5 வரை நடைபெற்றது. இதில் 2.23 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் பதிவேற்றிய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, பொறியியல் தரவரிசை பட்டியல் ஜூன் 29-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், CBSE 12-ஆம் வகுப்பு மறுமதிப்பீட்டு முடிவுகள் படிப்படியாக வெளியிடப்பட்டு வருவதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தரவரிசை பட்டியல் வெளியீடு ஜூலை 1-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
மேலும், தரவரிசை பட்டியலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவற்றை ஜூலை 1 முதல் ஜூலை 5 வரை திருத்திக்கொள்ள மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை (TFC) நேரில் அணுகி தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
