தனித்தமிழ்நாடு கோரிக்கயை தேசத்துரோகமாக பார்க்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்து போராடியவர் பொன்பரப்பி தமிழரசன். இவரது வாழ்க்கை வரலாற்றை தொகுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு கலகம் என்ற அமைப்பு வெளியிட்டது. பொள்ளாச்சியை சேர்ந்த வழக்குரைஞரும் கவிஞருமான இளங்கோவன் இந்த நூலை எழுதி இருந்தார். இந்த நூலை வெளியிட்டதற்காக திரைப்பட இயக்குநர் கி.ரா. மற்றும் தமிழ் பாலா ஆகியோர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை எதிர்த்து இயக்குநர் கீரா மற்றும் தமிழ் பாலா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் நேற்று (04.07.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது, “தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் ஒரு செயலைத் தீர்மானிக்கும்போது, தற்போதைய சமூகச் சூழலைக் கருத்தில் கொள்ள வேண்டும். இன்று யாராவது தனி தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்துப் பேசினால், அது பொதுமக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தாது; மாறாக, அத்தகைய கருத்தைச் சொல்பவர்கள் மனநலம் சார்ந்த பாதிப்பு உடையவர்களாகவே பார்க்கப்படுவார்கள்.
இத்தகைய கருத்துகள் அதிகபட்சம் எரிச்சலையே ஏற்படுத்துமே தவிர, தேசத்திற்கு எதிராகவோ அல்லது இந்திய அரசுக்கு எதிராகவோ எந்தவித வெறுப்புணர்வையும் தூண்டாது. சம்பந்தப்பட்ட புத்தகம், தமிழரசன் காலத்து நிகழ்வுகளை மட்டுமே வரலாற்றுப் பதிவாகக் குறிப்பிட்டுள்ளது. அது தற்போதைய சூழலில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் நோக்கம் கொண்டதல்ல” என்று தெரிவித்தார்.
