இந்திய உளவுத்துறையின் புதிய இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் நியமனத்திற்கான அமைச்சரவை நியமனக் குழு (ACC) இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது. தற்போதைய இயக்குநர் தபான் குமார் தெக்காவின் பதவிக்காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1993ஆம் ஆண்டு தெலங்கானா கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ் தீட்சித், மருத்துவத்தில் பட்டப்படிப்பை முடித்த பிறகு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய காவல் பணியில் சேர்ந்தார். காவல் துறை மற்றும் உளவுத்துறையில் முப்பதாண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட அவர், தேசியப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆபரேஷன்களை திறம்பட கையாண்ட அதிகாரிகளில் ஒருவராக மகேஷ் தீக்ஷித் அறியப்படுகிறார். தற்போது உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி வரும் அவர், பல முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
குறிப்பாக, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு மற்றும் உளவுத் தகவல்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய பொறுப்பை வகித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு சவால்களை சமாளிக்கும் பணிகளிலும் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தப் பணிகளை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு அவர் உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார். தற்போது நாட்டின் முக்கியமான உளவு அமைப்பான உளவுத்துறையின் இயக்குநராக பொறுப்பேற்க உள்ளார்.
