கோவை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் இன்னும் நியமிக்கப்படாத நிலையில், 8 வழக்குகளில் அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால் கோவை மாவட்ட ஆட்சியருக்கு ரூ.62 ஆயிரம் அபராதம் விதித்து 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றி வந்த அரசு வழக்கறிஞர்களின் பதவிக்காலம் கடந்த மாதம் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. புதிதாக 24 பேர் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டாலும், அதற்கான முறையான உத்தரவுகள் வழங்கப்படாததால் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவும், பொறுப்பேற்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று (6-7-2026), கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த 8 வழக்குகளில் கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், மாவட்ட ஆட்சியருக்கு ரூ.62 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடைபெற்ற கொலை வழக்கின் விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் ஆஜர்படுத்தப்பட்டார். சாட்சி அளிப்பதற்காக மருத்துவர் ஒருவர் கேரளாவில் இருந்து வந்திருந்தார். ஆனால், கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால் அரசு தரப்பின் சாட்சியிடம் விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், அந்தத் தொகையை மருத்துவரின் பயணச் செலவுக்காக வழங்குமாறும் நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார். அரசு தரப்பின் தவறு காரணமாகவே இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சாட்சிக்கு உரிய செலவை வழங்குவதற்காக வழக்குச் செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரத்தை ஒரு வாரத்திற்குள் இந்த நீதிமன்றத்தில் செலுத்துமாறும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று (6-7-2026) வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட நிலையில், சாட்சி அளிப்பதற்காக திருவாரூரில் இருந்து காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் ஆஜராகியிருந்தார். மேலும், குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரும் ஆஜராகியிருந்தனர்.
ஆனால், கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கு விசாரணை நடைபெறவில்லை. இவர்கள் நீதிமன்றத்திற்கு தேவையின்றி வரவழைக்கப்பட்டதால் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அரசு தரப்பின் தவறால் இந்த நிலை ஏற்பட்டதால், கோவை மாவட்ட ஆட்சியர் சார்பாக மாநில அரசு ரூ.9,000-ஐ நீதிமன்றத்தில் ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் தலா ரூ.1,000, காவல் துறை உதவி ஆய்வாளருக்கு ரூ.4,000 இழப்பீட்டுத் தொகையாக வழங்கவும் நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார். இதேபோல், நேற்று விசாரணைக்கு வந்த மொத்தம் எட்டு வழக்குகளில் ரூ.62 ஆயிரம் அபராதம் விதித்து 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.
பல்வேறு நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படாத நிலையில், வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
