தமிழகத்தில் கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் அரசு வழக்கறிஞர்களின் பணிக்காலம் முடிவடைந்தது என்று அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஜூலை மாதம் ஆரம்பித்து தற்பொழுது வரை கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படாததால் பல்வேறு கிழமை நீதிமன்றங்களில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாகவும் ஏராளமான வழக்குகள் தேக்கமடைந்திருப்பதாகவும் கோவை மாவட்ட அதிமுக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவை நீதிமன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் கடந்த 5 நாட்களாக நியமிக்கப்படாததால் பல்வேறு சிக்கல்கள் நிலவிவருகிறது. இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என தெரிவித்தார்.
மேலும், தமிழக வெற்றி கழக கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு அரசு வழக்கறிஞர்கள் பதவி கொடுத்தால் அவர்கள் அந்த பணியை செய்யட்டும்; நான் அதனை வரவேற்கிறேன். ஆனால், அவர்களுக்கு அதற்குரிய அரசாணைகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நீதிபதியை சந்தித்து உடனடியாக மாற்று ஏற்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்து உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தால் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த ஐந்து நாட்களில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பிணை வழக்குகள், எண்ணிலடங்கா சிவில் வழக்குகள் தேக்கமடைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
