அரசாங்கம்

மிரட்டும் ஆதவ் அர்ஜூனா…! அலறும் நெடுஞ்சாலைத்துறை ஊழல்வாதிகள்!

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நெடுஞ்சாலைத்துறையில் இனி யாராவது லஞ்சம் வாங்கினால் சஸ்பெண்ட்தான் என மிரட்டி இருக்கிறார். இதனால் உயர் அதிகாரிகள் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை ஊழல் செய்பவர்கள் அனைவரும் மிரண்டு போயிருக்கிறார்களாம்.

பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாதான் தற்போது நெடுஞ்சாலைத்துறைக்கும் அமைச்சர். நெடுஞ்சாலைத்துறையின் தலைமை அலுவலகம் சென்னை கிண்டி மக்கள் மாளிகைக்கு எதிரே அமைந்துள்ளது.

இந்த அலுவலகத்தில் கடந்த 25.5.2026 அன்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் CE, SE, DE என தமிழ்நாடு முழுக்க உள்ள அனைத்து மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா அதிகாரிகளுக்கு மத்தியில் சுமார் 20 நிமிடங்கள் பேசினார். அப்போது, “போன ஆட்சியில் இங்கு என்னென்ன தகிடுதித்தங்கள் நடந்தது என எனக்கு அனைத்தும் தெரியும். இப்போது நாங்கள் வந்திருக்கிறோம். நாங்கள் உங்களை மைக்ரோ லெவலில் கண்காணிக்கின்றோம். 40% வரையில் கமிஷன் கைமாறியது தெரியும். இனி இது தொடரக்கூடாது. எல்லோரும் சரியாக இருக்க வேண்டும். நான் சொல்வதை கேட்டுக்கொண்டு உங்களில் 90% பேர் திருந்தி செயல்படுவீர்கள் என எதிர்பார்க்கிறேன். ஆனால் 10% பேரால் திருந்த முடியாது என தெரியும். அவர்கள் அனைவரும் ஆரம்பத்திலேயே வேறு பதவிகளுக்கு டிரான்ஸ்பர் வாங்கிவிட்டு ஓடிவிடுங்கள்.

இந்த பதவிக்கு வருவதற்காக லட்சங்கள் தொடங்கி கோடிக்கணக்கான ரூபாய்கள் வரை கொடுத்தவர்களை எனக்கு தெரியும். இனிமேல் இப்படியெல்லாம் நடக்காது. நாங்கள் தேர்தல் செலவு செய்துவிட்டு இந்த பதவிக்கு வரவில்லை. அதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை.

மேலும், நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் அனைத்தையும் வேண்டப்பட்டவர்களுக்கே கொடுக்கலாம் என நினைப்பது நடக்காது. எந்த காண்டிராக்டரும் நேரடியாக நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு வரக்கூடாது. நீங்களும் அவர்களோடு தேவையில்லாமல் பேசக்கூடாது. ஏற்கனவே அலுவலகம் அங்கங்கே சிசிடிவி இருந்தாலும், இனிமேல் முழுவதும் சரியான முறையில் சிசிடிவி பொருத்த முடிவு செய்திருக்கிறேன். அதை நானே நேரடியாக கண்காணிப்பேன்.

கீழ்மட்ட அதிகாரிகள் இனி தவறு செய்யாதீர்கள். உங்களுக்கு மேலே இருப்பவர்கள் தவறு செய்ய தூண்டினால் நீங்கள் செய்யக் கூடாது. உங்களுக்காகவே பிரத்தியேகமாக ஒரு டோல் ஃப்ரீ நம்பர் தரப்போகிறேன். இது பொது மக்களுக்கு இல்லை. உங்கள் துறை பயன்பாட்டிற்கு மட்டும்தான். உங்களுக்கு இதுபோன்ற சிக்கல் வந்தால் நீங்கள் அந்த எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இதையும் நானே நேரடியாக கண்காணிப்பேன்.

நான் காலையில் 7-8 விளையாட்டுத்துறை அமைச்சர், 10-1 பொதுப்பணித்துறை அமைச்சர், 3-6 நெடுஞ்சாலைத்துறை அமைச்சர். அதனால் 3-6 இந்த அலுவலகத்தில் நான் இருப்பேன். எனக்கு இங்கே ஒரு அறையை தயார்படுத்துங்கள். எந்த ஒரு அதிகாரியும் என்னை நேரடியாக சந்திக்கலாம்” என பேசி முடித்திருக்கிறார்.

அவர் சொன்னதுபோலவே அவருக்கு ஒரு தனியறை ஒதுக்கப்பட்டு அங்கு போர்டும் மாட்டப்பட்டுள்ளது. எப்போது அமைச்சர் வருவார் என காத்திருக்கிறார்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.

மறுபுறம் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு நெடுஞ்சாலைத்துறையில் உள்ள ஊழல்வாதிகள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *