சட்டத்துறையில் வெற்றி பெற வெறும் புத்தகப் படிப்பு மட்டும் போதாது என்றும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை நேர்மையான முறையில் பெறுவதே ஒரு வழக்கறிஞரின் உண்மையான வெற்றி என்றும் கோவை சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா அறிவுறுத்தினார்.
கோவை சட்டக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். தனது உரையில், தான் 1983 முதல் 1988 வரை இதே கல்லூரியில் பயின்றதை பெருமையுடன் நினைவுகூர்ந்தார். பல மூத்த வழக்கறிஞர்களையும், உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் உருவாக்கிய பெருமை கோவை சட்டக்கல்லூரிக்கு உண்டு எனத் தெரிவித்த அவர், அத்தகைய சிறப்புமிக்க கல்லூரிக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், நூலகங்கள் மட்டுமின்றி இணையத் தேடுபொறிகள் மூலமாகவும் சட்ட விவரங்கள் அனைத்தும் இன்று விரல் நுனியில் கிடைப்பதாகக் குறிப்பிட்டார். கடந்த 38 ஆண்டுகளில் பல புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதால், வழக்கறிஞர்கள் தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது புதிய சட்ட மாற்றங்களை அறிந்துகொள்ள தங்களது நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று பட்டதாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
இளம் வழக்கறிஞர்களின் தொழில் தர்மம் மற்றும் ஒழுக்கம் குறித்துப் பேசிய அவர், நவீன காலத்தில் பெரும்பாலானோர் கைப்பேசிகளிலேயே மூழ்கியிருப்பதாகக் கவலை தெரிவித்தார். வாடிக்கையாளர்கள் அழைக்கும் போது, வேலைப்பளுவின் காரணமாகப் பேச முடியாவிட்டாலும், குறுஞ்செய்தி மூலமாவது அவர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். ஒரு வழக்கில் தோல்வியடைந்தாலும், வழக்கறிஞரின் நேர்மையான முயற்சியும், சரியான தகவல் தொடர்பும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை என்றும் நிலைநிறுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.
1980-களில் நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்களுக்கான அடிப்படை வசதிகள் பெருமளவில் இல்லை என்பதையும், ஒன்பது பெண்கள் தேர்வு எழுதினால் நான்கு பேரே தேர்ச்சி பெறும் நிலை இருந்ததையும் நினைவுகூர்ந்த அவர், தற்போது நிலைமை பெருமளவு முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் கூறினார். மேலும், மெய்நிகர் (Virtual) நீதிமன்றங்கள் வந்த பிறகு, வழக்கறிஞர்கள் எங்கிருந்தபடியும் பணியாற்ற முடியும் என்பதால், நேரத்தை முறையாகத் திட்டமிட்டு குடும்பத்திற்கும் தொழிலுக்கும் சரிசமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
ஒவ்வொருவரின் வெற்றிக்கும் பின்புலமாக இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும், வாழ்க்கைத் துணைக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு வழக்கறிஞர் தனக்கான நிலையான இடத்தைப் பிடிக்க குறைந்தது ஏழு முதல் எட்டு ஆண்டுகள் கடினமாகத் தொடர்ந்து உழைக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, அலுவலகத்திற்குச் சென்றவுடன் மூத்த வழக்கறிஞர் (Senior) தங்களுக்கு என்ன செய்வார் என்று எதிர்பார்ப்பதைவிட, தாங்கள் அந்த அலுவலகத்திற்காக என்ன செய்ய முடியும் என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்றார். மூத்த வழக்கறிஞர்களான எம். பஞ்சாபகேசன் மற்றும் முன்னாள் ஏ.எஸ்.ஜி. சி.எஸ். வைத்தியநாதன் ஆகியோரிடம் தான் கற்றுக்கொண்ட சட்ட நுணுக்கங்களையும், அவர்கள் தன்னிடம் காட்டிய வழிகாட்டுதலையும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
இறுதியாக, வழக்கறிஞர், கார்ப்பரேட் அதிகாரி அல்லது ஐ.ஏ.எஸ். என எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும், பொறுமை, நேர்மை மற்றும் சட்டத்தின் மூலம் நியாயத்தைப் பெற்றுத்தர வேண்டும் என்ற உன்னத எண்ணத்தோடு மாணவ சமுதாயம் செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா வாழ்த்தித் தனது உரையை நிறைவு செய்தார்.
