கார்ப்பரேட்

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம்; இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்ன?

கடந்த பிப்ரவரி மாதம் முதல் அமெரிக்கா–இஸ்ரேல் முகாமுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர், தற்போது அமைதி ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அமைதி ஒப்பந்தம் இந்திய பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போரும் அமைதியும்

இந்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கி அமெரிக்கா–இஸ்ரேல் முகாமுக்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடித்தது. இந்தப் போரின் விளைவாக சுமார் 122 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விநியோகச் சிக்கல்கள் உருவாகின.

இந்தச் சூழ்நிலையில், கத்தார் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா–ஈரான் இடையே அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டன. அதன் விளைவாக, ஜூன் 18 ஆம் தேதி அமெரிக்காவும் ஈரானும் 14 அம்சங்களைக் கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

மின்னணு முறையில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரான்சின் வெர்சாய் அரண்மனையிலிருந்தும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெஹ்ரானிலிருந்தும் பங்கேற்று கையெழுத்திட்டனர். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா–இஸ்ரேல் முகாமுக்கும் ஈரானுக்கும் இடையே 111 நாட்களாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது.

போரால் இந்தியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு

இந்தியா ஒரு எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்த நாடாகும். நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம் இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.

ரஷ்யா–உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, மேற்கத்திய நாடுகள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதைத் தவிர்த்ததால், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை மலிவு விலையில் இறக்குமதி செய்து வந்தது.

ஆனால் அமெரிக்காவின் வர்த்தக அழுத்தங்கள் மற்றும் வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை படிப்படியாகக் குறைத்தது. இதன் காரணமாக கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்தது.

இந்த எண்ணெய் இந்தியாவை வந்தடைய ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உலகின் மிக முக்கியமான எரிசக்தி போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான இந்த நீரிணையில், போர் காரணமாக ஏற்பட்ட நெருக்கடி எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை பாதித்தது.

இதன் விளைவாக இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு உருவானது. போக்குவரத்துச் செலவுகள் உயர்ந்தன. உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தது. விமானக் கட்டணங்கள் முதல் ஆட்டோ கட்டணங்கள் வரை உயர்த்தப்பட்டன. உலகின் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் போர், சாதாரண மக்களின் சமையலறை வரை தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் நிரூபித்தது.

இவை மட்டுமின்றி, எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையேற்றம் இந்தியாவில் சில்லறை விற்பனைப் பணவீக்கத்தை அதிகரித்தது. மேலும், உரம் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததால், விவசாயிகளின் உற்பத்திச் செலவுகள் அதிகரித்தன. இதனால் அரசுக்கு மானியச் சுமை ஏற்பட்டது.

மேலும், இந்தப் போரால் மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. வான்வெளி மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் ஏற்றுமதிச் செலவுகள் அதிகரித்தன. இதனால் இறக்குமதிக்கான அந்நியச் செலாவணியின் தேவை அதிகரித்தது. அதன் விளைவாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது.

இந்தியாவிற்கு ஏற்படப்போகும் நன்மைகள்

அதிபர் டிரம்ப் முதல் முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, ஈரானுடன் செய்யப்பட்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என அமெரிக்கா அறிவித்தது. இதையொட்டி, 2019 ஆம் ஆண்டு இந்தியா ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியது.

ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியபோது, மற்ற அரபு நாடுகளை விட ஒரு பேரலுக்கு சுமார் 24 டாலர் வரை குறைந்த விலையில் கிடைத்தது. இதனால் 2018–19 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா 23.9 மில்லியன் டன் கச்சா எண்ணெயை ஈரானிடமிருந்து இறக்குமதி செய்திருந்தது.

ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கவில்லை. தற்போதைய ஒப்பந்தத்தின்படி பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டுள்ளதால், இந்தியா மீண்டும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை தாராளமாக இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவிற்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கக்கூடும்.

இந்த அமைதி ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை குறைவது முக்கியமானதாக இருந்தாலும், அதுமட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா விதித்த தடைகளால் கிடப்பில் இருந்த இந்தியா–ஈரான் பொருளாதார உறவுகள் மீண்டும் புத்துயிர் பெறலாம்.

உரம், பெட்ரோகெமிக்கல் பொருட்கள், மருந்துத் துறைக்கான மூலப்பொருட்கள், உள்கட்டமைப்பு முதலீடுகள் உள்ளிட்ட பல துறைகளில் இந்திய நிறுவனங்களுக்கு ஈரானில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம்.

இந்தியாவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான சாபஹார் துறைமுக மேம்பாட்டுத் திட்டம் மீண்டும் வேகமெடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் செய்வதற்காக இந்தியா இந்தத் துறைமுகத்தை மேம்படுத்தி வருகிறது.

அதே நேரத்தில், சர்வதேச சந்தைகளில் நிலைத்தன்மை திரும்புவதால் இந்திய பங்குச் சந்தைகள், ரூபாயின் மதிப்பு மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆகியவை மேம்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் போரால் ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சியிலிருந்து இந்தியா படிப்படியாக மீண்டு வரலாம்.

பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் உடனடியாகக் குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆனால் நடைமுறையில் அவ்வளவு எளிதாக மாற்றங்கள் நிகழ்வதில்லை.

2022 ஆம் ஆண்டு முதல் நீடித்து வரும் ரஷ்யா–உக்ரைன் போரின் போது, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மலிவு விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி சுத்திகரித்து ஏற்றுமதி செய்து கணிசமான லாபத்தை ஈட்டின. இருப்பினும், அந்தக் காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையில் குறிப்பிடத்தக்க அளவிலான குறைப்பு ஏற்படவில்லை.

அதேபோல், தற்போதைய அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தத்தால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்தாலும், அதன் பலன் உடனடியாக இந்திய நுகர்வோருக்குக் கிடைக்குமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *